ஆசிய விளையாட்டு போட்டி 2023 - கிரிக்கெட்: அரையிறுதி போட்டிக்கு இலங்கை பெண்கள் அணி முன்னேற்றம்
சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளது.
சீனா,
சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று காலை நடந்த 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை- தாய்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. டாஸ் ஜெயித்த தாய்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தாய்லாந்து அணி 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுத்திருவாங் 31 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் இனோஷி பிரியதர்ஷினி 4 விக்கெட்டும் அட்டப்பட்டு, தில்ஹாரி, சுகந்திகா குமாரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 79 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய கேப்டன் அட்டப்பட்டு 27 ரன்னிலும், அனஷ்கா சஞ்சீவனி 32 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இலங்கை அணி 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 4-வது மற்றும் கடைசி கால் இறுதியில் வங்காள தேசம்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளைமறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும். அன்றைய தினம் நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.