ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

image courtesy: Afghanistan Cricket Board twitter

இன்று நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, இந்திய வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியதுடன் விக்கெட்டை வேகமாக பறிகொடுத்தது. 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 96 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணி தரப்பில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்னுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 55 ரன்னுடனும் (26 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் டக்-அவுட் ஆனார்.

மற்றொரு அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வை செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 116 ரன் இலக்கை 17.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் (காலை 11.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 6.30 மணிக்கு நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-வங்காளதேசம் சந்திக்கின்றன.


Next Story