ஆசிய விளையாட்டு: பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்


ஆசிய விளையாட்டு: பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்
x

image courtesy: ANI

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 9 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். மந்தனா 46 ரன்னில் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ரிச்சா கோஷ் (9 ரன்), பூஜா வஸ்ட்ராகர் (2 ரன்) நிலைக்கவில்லை. நடத்தை விதியை மீறியதால் 2 ஆட்டம் தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2 ரன்) ஏமாற்றம் அளித்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னில் (40 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. விக்கெட் கீப்பர் அனுஷ்கா சஞ்சீவானி (1 ரன்), விஷ்மி குணரத்னே (0), கேப்டன் சமாரி அட்டப்பட்டு (12 ரன்) ஆகியோரின் விக்கெட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது சாய்த்து அமர்க்களப்படுத்தினார். இந்த சரிவில் இருந்து அந்த அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை.

20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 97 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டது. இந்திய தரப்பில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திதாஸ் சாது 4 ஓவரில் ஒரு மெய்டனுடன் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெறுவது இது 3-வது முறையாகும். ஆனால் இந்த தடவை தான் இந்திய கிரிக்கெட் வாரியம் அணிகளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கி பிரமாதப்படுத்தியது. இதே போல் ஆண்கள் அணியும் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிடம் தோல்வி கண்ட இலங்கை அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. பாகிஸ்தான் நிர்ணயித்த 65 ரன் இலக்கை வங்காளதேச அணி 10 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.


Next Story