'கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை' - வங்காளதேச அணியின் கேப்டன் விளக்கம்


கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை - வங்காளதேச அணியின் கேப்டன் விளக்கம்
x

image courtesy: ICC via ANI

கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை என்று வங்காளதேச அணியின் கேப்டன் விளக்கமளித்துள்ளார்.

புனே,

புனேயில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி 97 ரன்னில் இருந்த போது, 42-வது ஓவரை வீசிய வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் நசும் அகமது முதல் பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். அதனை வைடு என்று நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரோக் அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நடுவர் வைடு கொடுக்கவில்லை. அந்த ஓவரின் 3-வது பந்தில் விராட்கோலி (103 ரன்) சிக்சர் தூக்கி சதத்தை எட்டியதுடன், வெற்றி இலக்கையும் கடக்க வைத்தார். விராட்கோலி சதம் அடிப்பதை தடுக்கும் முயற்சியாகவே நசும் அகமது பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசியதாக விமர்சனம் எழுந்தது.

இந்த சர்ச்சை குறித்து வங்காளதேச அணியின் பொறுப்பு கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் முறையான ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம். விராட்கோலியின் சதத்தை தடுக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை. அதுபோன்ற திட்டம் எதுவும் எங்களிடம் கிடையாது. எங்களிடம் வழக்கமான திட்டமே இருந்தது. எந்தவொரு பந்து வீச்சாளரும் வேண்டுமென்றே வைடாக வீச நினைப்பதில்லை.' என்றார்.

இதற்கிடையே விராட்கோலிக்கு எதிராக லெக் ஸ்டம்புக்கு வெளியே நசும் அகமது வீசிய பந்துக்கு புதிய விதிமுறைப்படி நடுவர் வைடு வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பந்து வீசுகையில் பேட்ஸ்மேன் நகர்ந்தால் வைடு வழங்க தேவையில்லை என்ற விதிமுறைபடியே நடுவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.

1 More update

Next Story