மாயாஜாலம் காட்டிய பேட்ஸ்மேன்கள்...கொல்கத்தா அணி 272 ரன்கள் குவிப்பு


மாயாஜாலம் காட்டிய பேட்ஸ்மேன்கள்...கொல்கத்தா அணி 272 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 3 April 2024 4:00 PM GMT (Updated: 3 April 2024 4:03 PM GMT)

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 272 ரன்கள் குவித்துள்ளது

விசாகப்பட்டினம்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பில் சால்ட் , சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட் 18 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து ரகுவன்ஷி களமிறங்கினார். நரைன் , ரகுவன்ஷி இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர் . குறிப்பாக நரைன் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

நரைன் 21 பந்துகளிலும் , ரகுவன்ஷி 25 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு நரைன் வாணவேடிக்கை காட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய நரைன் 39 பந்துகளில் 89 ரன்களுக்கு (7 பவுண்டரி , 7 சிக்சர் )வெளியேறினார். பின்னர் ரகுவன்ஷி 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த ரசல் , ரிங்கு சிங் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். . ரசல் 41 ரன்களும் , ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் நோர்ஜே , தலா 3 விக்கெட்,இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 273 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.


Next Story