பிசிசிஐ விருதுகள் 2023: சிறந்த வீரர் விருதிற்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு


பிசிசிஐ விருதுகள் 2023: சிறந்த வீரர் விருதிற்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு
x

Image Source : PTI

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

ஐதராபாத்,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2006-07-ம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டன. சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994-ல் வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ விருதுகள் கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிசிசிஐ தற்போது விருதுகள் அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படுகிறது. அதே போன்று சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்படுகிறது.

கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3,830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3,108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.

அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் பிசிசிஐ சார்பில் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

இதே போன்று கடந்த 2023 -ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story