சுனில் கவாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய பி.சி.சி.ஐ... காரணம் என்ன?


சுனில் கவாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய பி.சி.சி.ஐ... காரணம் என்ன?
x
தினத்தந்தி 8 March 2024 7:32 AM GMT (Updated: 8 March 2024 8:11 AM GMT)

இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு பி.சி.சி.ஐ கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தது.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011-ல் அறிமுகமான அவர் 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதனால் பி.சி.சி.ஐ. சார்பில் அவருக்கு 100-வது போட்டிக்கான ஸ்பெஷல் தொப்பியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கி கவுரவித்தார். மேலும் போட்டி துவங்குவதற்கு முன்பாக இரு பக்கமும் வீரர்களை நிறுத்தி கைதட்டி பாராட்டி வரவேற்ற கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வழி நடத்தும் கவுரவத்தை அஸ்வினுக்கு கொடுத்தார்.

அப்படி ஒருபுறம் அஸ்வினுக்கு கவுரவத்தை வழங்கிய பி.சி.சி.ஐ. மறுபுறம் வர்ணனையாளர்கள் அறையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தது. அதன் காரணம் என்னவெனில், 1987-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்தார். அதன்படி 10,000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தினத்தின் 37-வது வருடத்தை கொண்டாடும் வகையிலேயே அவருக்கு பி.சி.சி.ஐ. கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டியது.

இது குறித்து கவாஸ்கர் பேசியது பின்வருமாறு;- "இது சிறப்பானது. இந்த நாளை பி.சி.சி.ஐ. நினைவில் கொண்டதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மார்ச் 7-ம் தேதி 10,000 ரன்கள் அடித்தது எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. மேலும் வர்ணனையாளர் அறைக்கு வந்தபோது இந்த நாளில்தான் நான் என்னுடைய முதல் அரை சதத்தை அடித்ததாக மோகன்தாஸ் மேனன் தெரிவித்தார்.

இதே நாளில் அஸ்வின் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். எனவே இது எனக்கும் அஸ்வினுக்கும் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டுக்கு ஸ்பெஷலான நாளாகும். இந்த நாளில் துவங்கிய இப்போட்டியையும் நாம் வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.


Next Story