நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக ஆல் அவுட் ஆன பெங்களூரு - ரசிகர்கள் வருத்தம்


நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக ஆல் அவுட் ஆன பெங்களூரு - ரசிகர்கள் வருத்தம்
x

Image Courtesy: AFP 

ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக லோம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மயங்க் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆல் அவுட் ஆனதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஆல் அவுட் ஆன முதல் அணியாக பெங்களூரு மாறியுள்ளது.ஏற்கனவே நடப்பு ஐ.பி.எல் தொடரில் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான நிகழ்வையும் பெங்களூரு பதிவு செய்திருந்தது. தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஆல் அவுட் ஆன முதல் அணியாகவும் பெங்களூரு மாறியுள்ளதால் பெங்களூரு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.


Next Story