'மூளையற்றதனம்' - லக்னோவை சரமாரியாக சாடிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
சுலபமாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லக்னோ,
ஐபிஎல் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்தது.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
15 ஓவரில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், இறுதிகட்டத்தில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுலின் பொறுமையான ஆட்டத்தால் லக்னோ அணியின் ரன்வேகம் குறைந்தது.
15 வது ஓவர் முதல் 19 வது ஓவர் வரை 5 ஓவர்களுக்கு லக்னோ வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிபெற 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோகித் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சாள் லக்னோ அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 7 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
கடைசி கட்டத்தில் லக்னோ அணியின் மோசமான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், எளிதில் வெற்றிபெற வேண்டிய போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
9 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 35 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை உடைப்பதற்கு மிகவும் குழப்பமான பேட்டிங் தேவை. இது போன்று சுலபமாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வியடைந்த சில போட்டிகள் 2020-ம் ஆண்டு நடந்துள்ளது. குஜராத் அணி சிறப்பாக பந்துவீசியது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மூளையற்றதனம்' என்றார்.