இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கேமரன் கிரீன் விலகல் என தகவல்


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கேமரன் கிரீன் விலகல் என தகவல்
x

கோப்புப்படம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேமரன் கிரீன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும். 2012-ம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி உள்ளூரில் தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டி தொடர்களை வென்று வீறுநடை போடுகிறது.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய 3 டெஸ்ட் போட்டி தொடர்களையும் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. இதனால் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்குடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டார்.

இதற்கிடையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பயிற்சியில் கேமரூன் கிரீன் கலந்து கொள்ளாத நிலையில், அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.


Next Story