இனியும் பிசிசிஐ-யின் தலைவராக நீடிக்க போவதில்லை- சவுரவ் கங்குலி பரபரப்பு பேச்சு


இனியும் பிசிசிஐ-யின் தலைவராக நீடிக்க போவதில்லை- சவுரவ் கங்குலி பரபரப்பு பேச்சு
x

ஜெய் ஷாவுக்கு 2-வது முறை வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

இதை தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஒருபக்கம் ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.

அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் இருந்த சவுரவ் கங்குலி தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேசிய கங்குலி, பிசிசிஐ-யில் தான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்ததாகவும், இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் இனி போட்டியிட போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்து கங்குலி பரபரப்பாக பேசியதாவது:-

பிசிசிஐ-யில் நான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்தேன். இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருக்கிறேன். நீங்கள் எப்போதும் வீரராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டு பணிகளையும் செய்தது நன்றாக இருந்தது. வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள். நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன்.

அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது. அது போன்ற உயரத்திற்கு செல்வதற்கு நீங்கள் வருட கணக்கில் உழைக்க வேண்டும்.

ராகுல் டிராவிட் ஒரு நாள் அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். விளையாட்டை பொறுத்தவரை நான் அடித்த ரன்களையும் கடந்து , பலர் மற்ற விஷயங்களையும் நினைவில் கொள்கிறார்கள். உங்கள் அணியினருக்காக நீங்கள் ஒரு தலைவராக என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.


Next Story