பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சாம்பியன்:இந்த தருணத்துக்காக நீண்ட காலம் காத்திருந்தோம்.. ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சி


பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சாம்பியன்:இந்த தருணத்துக்காக நீண்ட காலம் காத்திருந்தோம்.. ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சி
x

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற பிறகு பேட்டி அளித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்த தருணத்துக்காகத் தான் நீண்ட காலம் காத்திருந்தோம் என்று கூறி நெகிழ்ந்தார்.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் டெல்லி நிர்ணயித்த 132 ரன் இலக்கை மும்பை அணி 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அரைசதம் அடித்த நாட் சிவெர் (60 ரன்) ஆட்டநாயகி விருதை பெற்றார்.

போட்டி இந்தியாவில் நடந்தாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியது என்னவோ வெளிநாட்டு மங்கைகள் தான். பேட்டர்களில் டாப்-3 இடத்தில் வெளிநாட்டு வீராங்கனைகளே இடம் பிடித்தனர். டெல்லி அணிக்காக ஆடிய ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (9 ஆட்டத்தில் 345 ரன்) முதலிடத்தை பிடித்து ஆரஞ்சு நிற தொப்பியும், அதற்குரிய ரூ.5 லட்சம் பரிசையும் பெற்றார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (10 ஆட்டத்தில் 3 அரைசதம் உள்பட 281 ரன்) 4-வது இடத்தை பெற்றார்.

பந்து வீச்சாளர் பட்டியலிலும் இதே நிலைமை தான். மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஹெய்லே மேத்யூஸ் 16 விக்கெட்டுகளுடன் ஊதா நிற தொப்பி கவுரவத்தை பெற்றார். அவருக்கும் ரூ.5 லட்சம் கிடைத்தது. டாப்-6 இடங்களை வெளிநாட்டு வீராங்கனைகளே ஆக்கிரமித்து இருந்தனர். இந்திய தரப்பில் டெல்லிக்காக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 10 விக்கெட்டுகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறார். வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை இந்தியரான மும்பை விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா (214 ரன்) பெற்றார்.

ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி

மகுடத்துக்கான ரூ.6 கோடி பரிசுத்தொகையை பெற்றுக்கொண்ட மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பின்னர் கூறுகையில், 'இந்த தருணத்துக்காகத் தான் நாங்கள் பல ஆண்டுகள் காத்திருந்தோம். ஏதோ கனவு போல் உள்ளது. எனக்கு மட்டுமல்ல எல்லா வீராங்கனைகளுக்கும் இதே உணர்வு தான். டபிள்யூ.பி.எல். போட்டி எப்போது நடக்கப்போகிறது என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்கள். இப்போது அந்த போட்டி நடந்து நாங்கள் கோப்பையையும் வென்று விட்டோம். எங்கள் வீராங்கனைகள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஓய்வறையில் நாங்கள் எந்த மாதிரி ஆலோசித்து திட்டமிட்டோமோ அதன்படி களத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பை எடுத்து கொண்டு விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்றைய நாள் எங்களுக்கு சிறப்பானது. இன்னொரு வகையில் நாங்கள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. நிறைய நோ-பால்கள் வீசியும் அவை எல்லாம் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையிலேயே எங்களுக்கு இது சிறப்பு வாய்ந்த தருணம். ஒரு பெரிய போட்டியில் கோப்பையை வெல்லும் போது எந்த மாதிரி மகிழ்ச்சியும், உணர்வுகளும் ஏற்படும் என்பதை இந்த வெற்றியின் மூலம் உணர்ந்தேன். இதற்குரிய எல்லா பெருமையும், சக வீராங்கனைகளையும், பயிற்சி குழுவினரையுமே சேரும். இந்த தொடரில் கிடைத்த அனுபவத்தையும், கற்றுக்கொண்ட விஷயங்களையும் இந்திய வீராங்கனைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இனி அடுத்த ஆண்டு டபிள்யூ.பி.எல். போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்' என்றார்.


Next Story