சென்னை அணிக்கு 200 ஆட்டங்களுக்கு கேப்டன்: தோனிக்கு நினைவுப்பரிசு - என்.சீனிவாசன் வழங்கினார்
ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு 200 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார்.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இது சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது ஆட்டமாகும்.
இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு 200 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். 'டாஸ்' போடுவதற்கு முன்பாக நடந்த பாராட்டு விழாவில் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சீனிவாசனின் மனைவி சித்ரா, மகள் ரூபா குருநாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
41 வயதான தோனி சென்னை சூப்பர் கிங்சை தவிர்த்து, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் 14 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டிருப்பது நினைவு கூரத்தக்கது.