'இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்' - அக்ஷர் பட்டேல்


இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் - அக்ஷர் பட்டேல்
x

ஐ.பி.எல். தொடரின் போது ‘டியூக்ஸ்’ வகை பந்தில் பயிற்சி மேற்கொண்டதாக இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் கூறியுள்ளார்.

லண்டன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இரண்டு மாதங்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டை முடித்த கையோடு இங்கிலாந்துக்கு பயணித்துள்ள இந்திய வீரர்கள் சில தினங்களாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி. சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் டியூக்ஸ் வகை பந்துகள் வீசப்படுகிறது. இதை மனதில் கொண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போதே பெரும்பாலான இந்திய வீரர்கள் டியூக்ஸ் வகை பந்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நேற்று பேசிய இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல், 'டியூக்ஸ் வகை பந்து வித்தியாசமானது. அதன் மீதுள்ள பளபளப்பு நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது நாங்கள் அந்த வகை பந்துகளை வாங்கி பயிற்சி எடுத்து பழகிக் கொண்டோம். எந்த பந்தாக இருந்தாலும் நீங்கள் உங்கள் திறமையை, உரிய திட்டமிடலுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். பந்தை துல்லியமாக பிட்ச் செய்து வீசினால் பலன் கிடைக்கும். வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவது மனரீதியாக கடினமானது. ஆனால் அதற்கு ஏற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய போது இந்தியாவில் 40-45 டிகிரி வெயில் கொளுத்தியது. அங்கிருந்து இங்கிலாந்து வந்ததும் சீதோஷ்ண நிலை இதமாக உள்ளது. இங்கு வெயில் இல்லை. சற்று காற்றுடன் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை வேறு தான். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். எது எப்படி என்றாலும் சீதோஷ்ண நிலை விளையாடப்போகும் இரு அணிக்குமே ஒன்று தான். இங்கு காற்றின் உதவியுடன் பந்தை 'ஸ்விங்' செய்ய முடியும். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீசினால் பந்து நன்கு பவுன்சும் ஆகும்' என்றார்.


Next Story