இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும் - டேவிட் வார்னர்


இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும் - டேவிட் வார்னர்
x

Image Courtesy: AFP 

பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர், மீண்டும் பார்மிற்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம்.

தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல பார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. 3-ம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story