உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியின் சென்னை, பெங்களூரு ஆட்டங்களை மாற்ற வலியுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி,
13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதன்படி தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் (அக்டோபர் 5-ந் தேதி) ஆமதாபாத்தில் மோதுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி அட்டவணையை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வரைவு அட்டவணையை போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கு அனுப்பி தங்களது கருத்தை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் தங்களுக்கான போட்டி நடைபெறும் 2 இடங்களை மட்டும் மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் (அக்டோபர் 20-ந் தேதி), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும் (அக்டோபர் 23-ந் தேதி) விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் அட்டவணையை விரும்பவில்லை. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும், பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என்பதால் அந்த மைதானங்களில் இவ்விரு அணிகளுடன் மோதுவது தங்களது பலத்துக்கு சாதகமாக இருக்காமல் போகலாம் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. எனவே தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பெங்களூருவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை சென்னைக்கும் மாற்றும்படி வலியுறுத்தி இருக்கிறது.
ஒரு அணி தனது பலம், பலவீனத்துக்கு தகுந்தபடி போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டுகோள் விடுத்தால் போட்டி அட்டவணையை இறுதி செய்வது என்பது இயலாத காரியமாகி விடும். அத்துடன் பாதுகாப்பு உள்ளிட்ட வலுவான காரணமின்றி போட்டி நடைபெறும் இடத்தை மாற்றும் வேண்டுகோள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுவது நடைமுறைக்கு சாத்தியமானது கிடையாது. எனவே பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில போட்டிகளை மாற்றும் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.