உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தியது இலங்கை
இலங்கை அணி 44.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹராரே,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரே நகரில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தீக்ஷனா, புதுமுகம் துஷன் ஹேமந்தா ஆகியோரின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 123 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த வெஸ்ட் இண்டீசுக்கு கேசி கர்டி கைகொடுத்தார். 8 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த கேசி கர்டி அந்தபொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.
ஷெப்பர்டு (26 ரன்), கெவின் சின்கிளேர் (25 ரன்) ஆகியோரின் ஒத்துழைப்போடு ஸ்கோரை கவுரவமான நிலைக்கு நகர்த்திய கேசி கர்டி (87 ரன், 96 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 48.1 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹேமந்தா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் பதும் நிசாங்காவும், கருணாரத்னேவும் முதல் விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்து வெற்றி வாய்ப்பை எளிதாக்கினர். தனது 3-வது சதத்தை எட்டிய நிசாங்கா 104 ரன்களில் (113 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். கருணாரத்னே தனது பங்குக்கு 83 ரன்கள் (92 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். இலங்கை அணி 44.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குசல் மென்டிஸ் 34 ரன்னுடனும், சமரவிக்ரமா 17 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2-வது தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். உலகக் கோப்பை வாய்ப்பை முன்பே உறுதி செய்து விட்ட இலங்கை அணி நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.