உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் வெற்றி


உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் வெற்றி
x

image courtesy: ICC twitter via ANI

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது.

ஹராரே,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் சிக்ஸ் மோதல் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதுடன், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

தகுதி சுற்றில் ஹராரேயில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாய்லார்ட் கும்பி, கேப்டன் கிரேக் எர்வின் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 63 ரன்னை எட்டிய போது ஜாய்லார்ட் 26 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெஸ்லி மாதேவிர் 2 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் கிரேக் எர்வின் 47 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ரையான் பர்ல், சிகந்தர் ராசாவுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரையால் பர்ல் 50 ரன்னிலும், சிகந்தர் ராசா 68 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

49.5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 268 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பிளஸ்சிங் முஜரபானி 11 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகீல் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 44.4 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 233 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேயர்ஸ் 56 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும், கேப்டன் ஷாய் ஹோப் 30 ரன்னும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் தென்டை சதரா 3 விக்கெட்டும், பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் நகரவா, சிகந்தர் ராசா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் நேபாளம் நிர்ணயித்த 168 ரன் இலக்கை நெதர்லாந்து அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய நேபாளத்துக்கு இது 3-வது தோல்வியாகும்.

'ஏ' பிரிவில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை சொந்தமாக்கிய ஜிம்பாப்வே அணி (6 புள்ளி) இன்னும் ஒரு ஆட்டம் மிஞ்சி இருக்கும் நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் இருக்கையில் அந்த பிரிவில் இருந்து நெதர்லாந்து (4 புள்ளி), வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டின. நேபாளம், அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

இன்றைய லீக் ஆட்டங்களில் அயர்லாந்து-இலங்கை, ஓமன்-ஸ்காட்லாந்து (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story