உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான் ?
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு மீதம் 4 போட்டிகள் உள்ளன.இதில் ஒரு போட்டியில் தோற்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துவிடும்.
இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.