12 பந்துகள் தான் சந்தித்திருப்பேன்... அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை - ருதுராஜ் கெய்குவாட்
12 பந்துகள் தான் சந்தித்திருப்பேன்... அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடந்த இப்போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை வேகப்பந்து வீச்சாளர் பதிரனா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, சிறப்பாக பந்து வீசிய பதிரனா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், போட்டிக்கு பின் சென்னை நட்சத்திர பேட்ஸ்மென் ருதுராஜ் கெய்குவாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதீஷா பதிரனா பந்து வீச்சு குறித்து ருதுராஜ் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கெய்குவாட், வலைபயிற்சியின் போது பதிரனா வீசிய 10 முதல் 12 பந்துகளை மட்டுமே நான் சந்தித்தேன். அப்போது அவரின் பந்து வீச்சை சந்திக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டேன். அவரது பந்து வீச்சை அடிப்பது, அவரது பந்து வீச்சை முடிவு செய்வது கடினமானது. முதலில் பந்து எங்கு உள்ளது என உங்களுக்கு தெரியவேண்டும். பந்து எங்கிருந்து வருகிறது என தெரியவேண்டும். இரண்டாவது என்னவென்றால் பந்து வீச்சின் லெந்த்தை கண்டறிவதாகும். அவர் பந்து வீச்சை சந்திக்கும்போது நீங்கள் எப்போதும் சற்று காலதாமதமாக பந்தை சந்திப்பீர்கள். நல்ல விஷயம் என்னவென்றால் அவர் எங்கள் அணியில் உள்ளார்' என்றார்.