மிகவும் நெருக்கமான புள்ளிப்பட்டியல் கொண்ட இதுபோன்ற தொடரை இதுவரை சந்தித்ததில்லை - சிஎஸ்கே பயிற்சியாளர் ஹசி


மிகவும் நெருக்கமான புள்ளிப்பட்டியல் கொண்ட இதுபோன்ற தொடரை இதுவரை சந்தித்ததில்லை - சிஎஸ்கே பயிற்சியாளர் ஹசி
x
தினத்தந்தி 10 May 2023 10:05 AM GMT (Updated: 10 May 2023 10:25 AM GMT)

டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என மைக் ஹஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 55-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் டெல்லி அணி இருக்கிறது.

இன்றைய போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சிபேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை திருப்தி அளிக்கிறது. டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் கீழே இருக்கிறது. ஆனால் இரண்டு வெற்றிகளை பெற்றால் அவர்கள் மேலே வரும் சூழல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கிறது.

டெல்லி கடைசியாக ஆடி உள்ள 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இருக்கிறது. எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சில பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதற்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

ஷிவம் துபே மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவர் பந்தை சிக்சருக்கு அடிக்கும் விதம் அபாரமானது. கடந்த சீசனில் அவரது பங்களிப்பு தெளிவில்லாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் டோனியும், பிளமிங்கும் அவருக்கென பிரத்யேகமான ஒரு பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் அவர் ஆட வேண்டும் என்பதே அணியின் திட்டம்.

ஷிவம் துபேயும் அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். இதே போல கான்வே, ரகானே ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர்.

இவ்வாறு மைக் ஹஸ்சி கூறினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் கூறும்போது,

'ரிஷப் பண்ட் இல்லாதது அணிக்கு பாதிப்பே. மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். எங்களது அணி வீரர்கள் தங்களது சிறப்பான நிலையை வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story