உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம்


உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம்
x

image courtesy: ICC via ANI

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் இலங்கை அணி அயர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும். அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.

தகுதி சுற்றில் புலவாயோவில் நேற்று நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, அயர்லாந்தை (பி பிரிவு) எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார்.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா (20 ரன்), விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் (0) சீக்கிரம் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னேவும், சதீரா சமரவிக்ரமாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான நிலைக்கு உயர்த்தினர். ஸ்கோர் 216-ஐ எட்டிய போது, சமரவிக்ரமா 82 ரன்னில் சிக்கினார். மறுமுனையில் பொறுமையாக ஆடிய கருணாரத்னே ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை ருசித்தார். சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே கருணாரத்னே (103 ரன், 103 பந்து, 8 பவுண்டரி) போல்டு ஆனார்.

இதன் பின்னர் சாரித் அசலங்கா (38 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (42 ரன்) அதிரடி காட்டி ஸ்கோர் 300-ஐ தாண்ட வைத்தனர். இலங்கை அணி 49.5 ஓவர்களில் 325 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் இலங்கை 350 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் 44 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால் கொஞ்சம் குறைந்து போனது.

அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி, இலங்கையின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 31 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பெர் 38 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை 133 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா 5 விக்கெட்டுகளும், தீக்ஷனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்ற இலங்கை அணி இந்த பிரிவில் 6 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றை உறுதி செய்தது. அதே சமயம் தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய அயர்லாந்து போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் கால்பதிக்கும் அயர்லாந்தின் கனவு கலைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதற்கு முன்பு மூன்று முறை விளையாடியுள்ள அயர்லாந்து 2019-ம் ஆண்டிலும் தகுதி சுற்றுடன் அடங்கியது நினைவு கூரத்தக்கது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து- ஓமன் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் 320 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பிரன்டன் மெக்முல்லென் 136 ரன்கள் (121 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். பின்னர் ஆடிய ஓமன் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 244 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஸ்காட்லாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் கிறிஸ் கிரீவ்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3-வது வெற்றியை சுவைத்த ஸ்காட்லாந்தும், தோல்வி அடைந்த ஓமனும் (2 வெற்றி, 2 தோல்வி) சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டின. 'பி' பிரிவில் அயர்லாந்துடன், ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகமும் வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வே-அமெரிக்கா, நெதர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வேட்டையாடியிருந்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் மூன்று முறை 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.


Next Story