விராட் கோலி , ராஸ் டெய்லர் வரிசையில் சாதனை பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்


விராட் கோலி , ராஸ் டெய்லர் வரிசையில் சாதனை பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்
x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டேவிட் வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஹோபர்ட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் 100-வது டி20 போட்டியாக அமைந்தது. இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இதன் மூலம் அவர், விராட் கோலி, ராஸ் டெய்லர் வரிசையில் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு;-

இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான பார்மெட்களிலும் 100 போட்டிகளில் விளையாடி இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்.


Next Story