'டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது' - சேவாக் கோரிக்கை


டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது - சேவாக் கோரிக்கை
x

Image Courtesy : PTI

தற்போது பிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன்.

மும்பை,

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்திருந்தார்.

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வார்னர் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அழைப்பு இருந்தால் அதில் விளையாட தயார் எனவும், ஆஸ்திரேலியா அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமானால் விடைபெறுங்கள் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுங்கள் என்று டேவிட் வார்னருக்கு வீரேந்தர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறியதாவது,

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் கடந்த 2009-ம் ஆண்டு விளையாட வந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே அவர் அறிமுகமாகி இருந்தார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடியதை பார்த்த போது இவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான திறமை இருப்பது எனக்கு நன்றாக தெரிந்தது.

ஆனால் அவரைப் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை அந்த வயதில் கொண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும் நான் அவரால் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகளில் அசத்த முடியும் என்று கருதினேன். இது பற்றி நேரடியாகவே வார்னரிடம் சொன்ன போது அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சொன்னார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாள் முழுவதும் பவர் பிளே போல் இருக்கும் என்பதால் நீங்கள் டெஸ்டில் விளையாட வேண்டும் என்று நான் சொன்னேன்.

அதற்கு அப்படியானால் நான் கண்டிப்பாக விளையாடுவேன் என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் நான் அப்படி சொன்னதற்காக மகிழ்ச்சியடைந்து மெசேஜ் செய்தார். தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறக்கூடாது என்பது என்னுடைய சொந்த கருத்தாகும். இருப்பினும் 35-36 வயதில் நீங்கள் குடும்பத்தை பற்றி சிந்திப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

தற்போது பிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story