கடைசி பந்தில் சிக்சர் பறக்கவிட்டு அசத்திய சஜனா: கனா படத்தில் நடித்தவரா இவர்..?


கடைசி பந்தில் சிக்சர் பறக்கவிட்டு அசத்திய சஜனா: கனா படத்தில் நடித்தவரா இவர்..?
x

சஜீவன் சஜனா குறித்த சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

நேற்றிரவு அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணியில் ஷபாலி வர்மா (1 ரன்) சொதப்பினாலும், அலிஸ் கேப்சி (75 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (42 ரன்), கேப்டன் மெக் லானிங் (31 ரன்) ஆகியோர் சவாலான ஸ்கோரை அடைய வழிவகுத்தனர். 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் நாட் சிவெர், அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா (57 ரன்), அமெலியா கெர் (24 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் வெற்றியை நோக்கி பயணித்தது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (55 ரன்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த சஜனா (6 ரன்) கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து மும்பைக்கு 'திரில்' வெற்றியை தேடித்தந்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்த வீராங்கனை சஜீவன் சஜனா குறித்த சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிக்கனியை மும்பைக்கு பரிசளித்த சஜனா, கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர். ஆப் ஸ்பின்னரான இவரை மும்பை அணி ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பு செலுத்துவார் என்பதால் ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார்.

சஜீவன் சஜனா, ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர். கேரள வெள்ளத்தின்போது கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தவர். இந்த போட்டியின் முடிவு நாம் எதிர்பார்த்தது அல்ல, ஆனால் அது அறிமுக வீரரான சஜ்ஜூவின் முடிவு..." என சக வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் பராட்டியுள்ளார்.

இதனிடையே அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் வெளியான 'கனா' படத்தில் சஜனா நடித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேசின் நண்பர்களில் ஒருவராக கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த இவர், சிவகார்த்திகேயனுடனும் ஒரு சில காட்சிகளில் தோன்றியிருப்பார். இந்த தகவல்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story