பந்து வீச்சில் தாமதம்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு அபராதம்.! சுப்மன் கில்லுக்கும் தண்டனை
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
லண்டன்,
லண்டன் ஓவலில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது. இதேபோல் ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
இது குறித்து கள நடுவர்கள் அளித்த அறிக்கையை அடுத்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதமாக விதித்தார். அத்துடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றத்துக்காக போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாகவும் விதிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 18 ரன்னில் ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கேமரூன் கிரீன் கையை தரையில் உரசியபடி பிடித்த இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று அறிவித்த 3-வது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளத்தில் சுப்மன் கில் விமர்சனம் செய்ததால் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.