ரோகித் ஆதரவு போஸ்டர்களுக்கு அனுமதி மறுப்பு...!! ரசிகர்கள் கொந்தளிப்பு; வைரலான வீடியோ


ரோகித் ஆதரவு போஸ்டர்களுக்கு அனுமதி மறுப்பு...!! ரசிகர்கள் கொந்தளிப்பு; வைரலான வீடியோ
x

ரோகித் பற்றி எழுதப்பட்ட போஸ்டர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே குவியலாக ஓரத்தில் வீசப்பட்டு கிடக்கின்றன.

மும்பை,

ஐ.பி.எல். போட்டி தொடரின் இந்த சீசனில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.

எனினும், போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. ஏற்கனவே, ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யாவுக்கு கொடுக்கப்பட்டது ரசிகர்களில் பலரிடையே கோபம் ஏற்படுத்தி இருந்தது.

இதனால், ஒவ்வொரு போட்டியின்போதும், ஹர்திக்குக்கு எதிராக ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு குரல் வருவதும் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரோகித் சர்மா பற்றிய பதாகை ஒன்றில், பிரபல பாலிவுட் படத்தில் இடம் பெற்ற வாசகம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

ஆனால், அதனை வான்கடே ஸ்டேடியத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுபற்றி ரசிகர் ஒருவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஸ்டேடியத்திற்குள் ரோகித் சர்மா பற்றிய போஸ்டர்கள் எதனையும் அணி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிறந்த கபட நாடகம் இது.

ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் மிக பெரிய பங்குதாரர்களாக ரசிகர்கள் உள்ளனர். ஆனால், ரசிகர்களுக்கு இப்படி செய்யும்போது, உங்களுடைய டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஏன் வாங்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். இது வெட்கக்கேடானது என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது. அதில், ரோகித் பற்றி எழுதப்பட்ட போஸ்டர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே குவியலாக ஓரத்தில் வீசப்பட்டு கிடக்கின்றன.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால், தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யாவுக்கு எதிரான ரசிகர்களின் கோபம் அதிகரித்தது. களத்தில் இறங்கியபோதும், டாஸ் போடும்போதும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சல் போட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரை மறந்து விடும் அளவுக்கு நிலைமை தலைகீழாக உள்ளது. 10 அணிகள் கொண்ட புள்ளிகள் பட்டியலில் 3 போட்டிகளில் தொடர் தோல்வியால், கடைசி இடத்தி;றகு அந்த அணி தள்ளப்பட்டு உள்ளது.


Next Story