தோனி ஒரு அற்புதமான கேப்டன்...அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இது தான் - மகேஷ் தீக்சனா
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நிச்சயம் எங்களால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என தீக்சனா கூறினார்.
கொழும்பு,
இந்தியாவில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதுக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனாவும் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாட ஐபிஎல் எவ்வாறு உதவப்போகிறது என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இந்திய மைதானங்களில் ஐசிசி தொடரில் நாங்கள் விளையாட இருக்கிறோம். இது போன்ற பெரிய தொடரில் உலக மக்களின் பார்வையும் நம் மீது இருக்கும். எனவே இந்த தொடர் எவ்வளவு முக்கியமானது? அதில் எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும்? என்பது குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடந்த போது இறுதி போட்டி வரை நாங்கள் முன்னேறினோம். அந்த வகையில் இம்முறையும் நிச்சயம் எங்களால் இந்திய மைதானங்களில் சிறப்பாக விளையாட முடியும்.
மேலும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் பல அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். குறிப்பாக ஷனகா குஜராத்துக்காகவும், ஹசரங்கா பெங்களூருக்காகவும், நான் சென்னை அணிக்காகவும் விளையாடி உள்ளோம். எனவே இந்தியாவில் உள்ள மைதானங்களில் விளையாடிய அனுபவங்கள் எங்களுக்கு கண்டிப்பாக உதவும்.
தோனி ஒரு அற்புதமான தலைவர் மற்றும் கேப்டன். அவரைப் போன்ற கேப்டன் அணியில் இருக்கும் போது அனைத்து வீரர்களுமே அவரிடமிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்வார்கள்.
அந்த வகையில் நான் தோனியிடம் இருந்து அழுத்தமான சூழ்நிலையில் எவ்வாறு போட்டியை அணுக வேண்டும், எந்த பதட்டமும் இன்றி எவ்வாறு நம் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்த பல்வேறு பாடங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு ஒரு லீடராகவும், கேப்டனாகவும் அழுத்தமான சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார் .