இங்கிலாந்தில் விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவின் சிலை ஜூலை 1-ந் தேதி திறப்பு


இங்கிலாந்தில் விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவின் சிலை ஜூலை 1-ந் தேதி திறப்பு
x
தினத்தந்தி 23 May 2023 10:28 PM GMT (Updated: 24 May 2023 12:20 AM GMT)

மேற்கு வங்காள மாநிலம் சர்காச்சியில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி விஷ்வமயானந்தாஜி இந்த சிலையை வடிவமைத்துள்ளார்.

கொல்கத்தா,

அயர்லாந்து நாட்டில் பிறந்த கல்வியாளரான மார்க்கரெட் எலிசபெத் நோபல், இந்தியாவுக்கு வந்து தனது வாழ்வை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டார். சுவாமி விவேகானந்தரை தனது ஆன்மிக குருவாக ஏற்ற இவர், சகோதரி நிவேதிதா என்று அழைக்கப்பட்டார்.

அவர் இந்தியா வருவதற்கு முன்பு, இங்கிலாந்து விம்பிள்டனில் ஒரு பள்ளியை நிறுவினார்.அதை நினைவுகூரும்விதமாகவும், பெண்கல்விக்கு சகோதரி நிவேதிதா ஆற்றிய பங்களிப்பை பெருமைப்படுத்தும்விதமாகவும் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள விம்பிள்டனில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படுகிறது.

மேற்கு வங்காள மாநிலம் சர்காச்சியில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி விஷ்வமயானந்தாஜி இந்த சிலையை வடிவமைத்துள்ளார். நிரஞ்சன் தே என்ற சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார்.

விம்பிள்டனில் உள்ள ரிச்சர்ட்ஸ் லாட்ஜ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு முன் அமைக்கப்படும் இந்த சிலை வரும் ஜூலை 1-ந் தேதி திறக்கப்படுகிறது. சகோதரி நிவேதிதா விழா கொண்டாட்ட குழுவின் செய்தித்தொடர்பாளரான சாரதா சர்க்கார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெவோன்ஷயரில் உள்ள சகோதரி நிவேதிதாவின் குடும்ப கல்லறை தோட்டத்தில் ஏற்கனவே அவரது மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.


Next Story