"குஜராத் பிட்ச்ல பேயா இருக்கு...? ஒழுங்கா போய் விளையாடுங்க" – பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடி அறிவுரை!


குஜராத் பிட்ச்ல பேயா இருக்கு...? ஒழுங்கா போய் விளையாடுங்க – பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடி அறிவுரை!
x

பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லப்பட்டது.

புதுடெல்லி

அரசியல் காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பல ஆண்டுகளாகத் தவிர்த்து வருகின்றன. மேலும் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியும் வழங்கப்படுவதில்லை.

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் சம்மதித்திருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லப்பட்டது.

தற்பொழுது இது குறித்து மிகக் காட்டமாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரருமான ஷாகித் அப்ரிடி பேசி இருக்கிறார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் அச்சங்களை களைந்து அணியை போட்டியிட அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

அவர் உள்ளூர் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

" குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? அந்த ஆடுகளம் தீயை வீசுமா? இல்லை அந்த ஆடுகளத்தில் பேய் இருக்கிறதா? போய் விளையாடு ; வெற்றி பெறு!

இறுதியில் முக்கியமானது பாகிஸ்தான் அணியின் வெற்றிதான். இதில் இருக்கின்ற முக்கிய விஷயமே இதுதான். இந்திய அணிக்கு அந்த மைதானம் சாதகமாக இருக்கும் என்றால், நீங்கள் அங்கு சென்று விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி இருக்கின்ற இடத்தில் வெற்றியை உங்கள் பக்கம் இழுக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதை அவர்களுக்குக் காட்ட வேண்டும்!" என்று கூறி உள்ளார்.


Next Story