இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: லண்டனில் இன்று தொடக்கம்


இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: லண்டனில் இன்று தொடக்கம்
x

இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுள்ளார். இதே போல் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஒதுங்கியதால் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து அணி புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேப்டன் சுமை இல்லாமல் இனி ஜோரூட் சுதந்திரமாக விளையாட முடியும். அவர் 111 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் 10 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார்.

நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஐ.பி.எல். போட்டியை முடித்துக் கொண்டு இப்போது தான் லண்டன் வந்திருப்பதால் அவர் முதலாவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணி 18 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டுமே (1999-ம் ஆண்டில்) வெற்றி பெற்றுள்ளது. இந்த நீண்ட சோகத்துக்கு முடிவுகட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டுகிறது.போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், மேத்யூ போட்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து: டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், கைல் ஜாமிசன், டிம் சவுதி, நீல் வாக்னெர், மேட் ஹென்றி அல்லது அஜாஸ் பட்டேல்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story