இங்கிலாந்து வீரர் டாம் கரணுக்கு 4 பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாட தடை..!


இங்கிலாந்து வீரர் டாம் கரணுக்கு 4 பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாட தடை..!
x

image courtesy; AFP 

சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் டாம் கரண் விளையாடி வருகிறார்.

சிட்னி,

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் டாம் கரண் விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்சர்ஸ் விளையாடியது.

இந்த போட்டிக்கு முன்பாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் மைதானத்தில் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டாம் கரண் போட்டி நடைபெறவிருந்த பிட்ச்சில் பந்து வீசி பயிற்சி எடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அனுமதிக்காத போட்டியின் நடுவர் அருகில் உள்ள வேறு பிட்ச்சில் பயிற்சி எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அதை ஏற்காத டாம் கரண் அதே பிட்ச்சில்தான் பயிற்சி எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டே பந்து வீசும் இடத்திற்கு சென்றார். அப்போது பிட்ச்சின் பக்கவாட்டு பகுதிக்கு கூட நீங்கள் வரக்கூடாது வேண்டுமானால் ஓரமாக சென்று பந்து வீசுங்கள் என்று மீண்டும் நடுவர் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார். ஆனாலும் அதையும் ஏற்காத டாம் கரண் ஓடி வந்தார்.

பொதுவாக போட்டி துவங்குவதற்கு முன்பாக அதற்கான பிட்ச்சில் மைதான பராமரிப்பாளர்களை தவிர்த்து யாரும் செல்லக்கூடாது என்பது விதிமுறையாகும். அதை விட போட்டி துவங்குவதற்கு முன்பாக அந்த பிட்ச்சில் இரு அணிகளைச் சேர்ந்த பவுலர்களும் ஒரு பந்தை கூட வீசி பயிற்சி செய்யக்கூடாது என்பது கண்டிப்பான விதிமுறையாகும்.

அந்த வகையில் போட்டி நடைபெறவிருந்த பிட்ச்சில் அனுமதியைத் தாண்டி பந்து வீச முயற்சித்த டாம் கரணுக்கு எதிராக நடுவர்கள் புகார் செய்தனர். இதனை விசாரித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதிமுறையை மீறி பிட்ச்சில் பந்துவீச சென்ற டாம் கரணுக்கு அடுத்த 4 பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிரடி தடையை விதித்துள்ளது.


Next Story