இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் பேட்டி


இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் பேட்டி
x

கோப்புப்படம் PTI

இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் கூறியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கிறது. இறுதி ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தங்களது ஆசையை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதையே ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனும் பிரதிபலித்துள்ளார்.

வாட்சன் இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதை பார்க்கவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் சூப்பர்12 சுற்றில் மெல்போர்னில் மோதிய ஆட்டத்தை நான் நேரில் பார்க்க முடியாமல் போனது. முந்தைய நாளில் நடந்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்கு வர்ணனையாளராக பணியாற்றியதால் என்னால் நேரில் பார்க்க முடியவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்த்த எல்லா தரப்பினரும் பிரமாதமானமாக இருந்தது என்று கூறினர். நானும் டி.வி.யில் ஆட்டத்தை பார்த்து வியந்து போனேன். முதலாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தான் மோதின. அதே போன்று மறுபடியும் நடக்க வேண்டும் என்று மக்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

நிறைய தொடர்களில் ஒரு சில அணிகள் அடுத்த சுற்றுக்கு தட்டுதடுமாறி வரும். ஆனால் கடைசியில் கோப்பையை வென்று விடுவார்கள். இதே போல் தான் இப்போது பாகிஸ்தான் அணியும் உள்ளது. அவர்கள் அரைஇறுதிக்கு வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் விளையாடிய விதம் சரியாக அமையவில்லை. ஆனால் இப்போது அரைஇறுதிக்கு வந்திருப்பது நிச்சயம் நியூசிலாந்துக்கு ஆபத்து தான்' என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே கருத்தை முன் வைத்துள்ளார். அவர் கூறும் போது, 'பாகிஸ்தான் அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறும் என்று முன்பு கூறியிருந்தேன். எனது கணிப்பு தவறு என்பதை நிரூபித்து விட்டார்கள். அதற்கு முதலில் நெதர்லாந்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இந்தியாவும், பாகிஸ்தானும் அரைஇறுதியுடன் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று நம்புகிறேன். இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் மல்லுகட்டுவதை பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு நடக்கும் போது அது ஒளிபரப்பு தாரர்களும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்ததில்லை. பல ஆட்டங்களில் தோற்று இருக்கிறார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் இருந்து இன்னும் சிறந்த கிரிக்கெட் வெளிப்படவில்லை. 'பவுன்ஸ்' ஆடுகளங்களில் எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறுகிறார்கள்' என்றார்.


Next Story