முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா


முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 22 Sep 2023 12:20 PM GMT (Updated: 22 Sep 2023 12:23 PM GMT)

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது.

மொகாலி,

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் களமிறங்கினர். மார்ஷ் ஒரு ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து டேவிட் வார்னர்- ஸ்மித் இருவரும் இணைந்து சீரான வேகத்தில் ரன்களை திரட்டினர். வார்னர் அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித்(41), லபுசேன்(39), கிரீன்(31), இங்கிலிஷ்(45), ஸ்டோய்னிஸ்(29) ஆகியோருக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story