முதல் ஒருநாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!


முதல் ஒருநாள் போட்டி;  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 17 Dec 2023 6:06 PM IST (Updated: 17 Dec 2023 8:18 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இந்திய பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் வரிசையாக வீழ்த்தினர்.

வெறும் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் சாய் சுதர்சனுடன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர்.

இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். வெற்றியை நெருங்கிய சமயத்தில் அரைசதம் அடித்த நிலையில் ஐயர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

1 More update

Next Story