முதல் ஒருநாள் போட்டி : சரிவில் இருந்து மீட்ட கே.எல்.ராகுல் , ஜடேஜா ..! ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார்.
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது . ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார் .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது . அதன்படி தொடக்க வீரர்களாக டிரேவிஸ் ஹெட் , மிட்சேல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டிரேவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார்,அவர் நிதானமாக விளையாடினார். மார்ஷ் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.
மறுபுறம் ஸ்மித் 22 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார் . தொடர்ந்து லபுசேன் 15 ரன்கள் , ஜோஷ் இங்கிலிஷ் 26 ரன்கள் , கேமரூன் கிரீன் 12 ரன்கள் ,ஸ்டாய்னிஸ் 5 ரன்கள் , மேக்ஸ்வெல் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.தொடர்ந்து 189ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.
தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் , சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் இஷான் கிஷான் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி 4 ரன்கள் , சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கில் 20ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கே.எல்.ராகுல் , ஹார்திக் பாண்டியா இணைந்து நிலைத்து ஆடினர். ஹார்திக் 25 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து கே.எல் . ராகுல் , ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் .சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்களில் 191ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 75ரன்களும் , ஜடேஜா 45ரன்களும் எடுத்தனர்.ஆஸ்திரேலியா சார்பில் மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட் , ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தனர் .
இந்த வெற்றியால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.