முதல் டி20 போட்டி: இந்திய அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்கு


அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டப்ளின்,

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது.

இந்நிலையில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களமிறங்கினார். இதனிடையே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மழை காரணமாக போட்டி 12 ஒவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பரீன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், பால் ஸ்ட்ர்லிங் 4 ரன்னும், கேரித் டிலேனி 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய ஹேரி டெக்டார், லோர்சன் டக்கருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தநிலையில் டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டார் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் ஹேரி டெக்டார் 64 (33) ரன்களும், டாக்ரேல் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 12 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேரி டெக்டார் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அவேஸ் கான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story