இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி
x

Image Courtesy: AFP 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

லண்டன்,

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 73 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் (8 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) தாக்குப்பிடிக்கவில்லை.

பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், 161 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் டீன் எல்கர் 47 ரன்னிலும், சாரெல் எர்வீ 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

161 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சை போல் இந்த இன்னிங்சிலும் மிகுந்த தடுமாற்றத்துடன் விளையாடினர். அந்த அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக லீஸ் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் தலா 35 ரன்கள் எடுத்தனர். ரூட் 6 ரன்னிலும், கேப்டன் ஸ்டோக்ஸ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டும், ரபாடா, மகராஜ், மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.


Next Story