'முதல் வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது' - டெல்லியை வீழ்த்திய பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


முதல் வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - டெல்லியை வீழ்த்திய பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x

கிரிக்கெட்டில் முதல் வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது என்று மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதில் டெல்லி நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை, மும்பை அணி இஷான் கிஷன் (31 ரன்), கேப்டன் ரோகித் சர்மா (65 ரன்), திலக் வர்மா (41 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் எளிதில் எட்டுவது போல் தோன்றியது. ஆனால் இறுதிப் பகுதியில் நெருக்கடிக்குள்ளான மும்பை அணி கடைசி பந்தில் தேவையான 2 ரன்னை போராடி எடுத்து வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இந்த சீசனில் முதல் வெற்றியாக இது பதிவானது.

அரைசதம் அடித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 19-வது முறையாகும். பின்னர் அவர் கூறுகையில், 'போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். ஒரு வழியாக இலக்கை கடந்தது சிறப்பான உணர்வை தருகிறது. முதல் ஆட்டத்தில் இருந்தே நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். தொடருக்கு முன்பாக மும்பையில் இரு வாரங்கள் பயிற்சி முகாம் நடத்தியிருக்கிறோம். அதற்குரிய பலனாக வெற்றி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் வெற்றி எப்போதும் 'ஸ்பெஷல்' தான்.

சமீபத்தில் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தோம். ஆடுகளத்தை பார்த்த போது அதில் இருந்து பெரிய அளவில் மாற்றம் தெரியவில்லை. வறண்டு காணப்பட்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்தேன்.

ஒவ்வொருவரும் கைகொடுத்தால் 173 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான். நான் பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது, பவர்-பிளேயை நன்றாக பயன்படுத்தி ரன் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஏனெனில் அவர்களிடம் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் மிடில் ஓவர்களில் துரிதமாக ரன் எடுப்பது கடினம். அதனால் தான் தொடக்கத்தில் அதிரடியாக (முதல் 6 ஓவரில் 68 ரன்) ஆடினேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் எங்கள் அணியில் சிலர் ஐ.பி.எல். போட்டிக்கு முற்றிலும் புதியவர்கள். அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது முக்கியம். வீரர்களின் ஓய்வறையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். ஆட்டத்தின் முடிவுகளை வைத்து அணியில் தடாலடியான மாற்றங்களை செய்ய விரும்பவில்லை.' என்று கூறினார்.


Next Story