145 கால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக...பாகிஸ்தான் அணி செய்த சம்பவம்...!


145 கால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக...பாகிஸ்தான் அணி செய்த  சம்பவம்...!
x

Image Courtesy: ICC Twitter 

தினத்தந்தி 27 Dec 2022 4:08 AM GMT (Updated: 27 Dec 2022 4:52 AM GMT)

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சர்ப்ராஸ் அகமது சேர்க்கப்பட்டார். ஏறக்குறைய 4 ஆண்டுக்கு பிறகு சர்ப்ராஸ் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இதில் 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் (7 ரன்) அஜாஸ் பட்டேலின் சுழலில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து ஆட முயற்சித்த போது, விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் அவரை ஸ்டம்பிங் செய்தார். அடுத்து வந்த ஷான் மசூத்தும் (3 ரன்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இமாம் உல்-ஹக்கும் (24 ரன்), சாத் ஷகீலும் (22 ரன்) மதிய உணவு இடைவேளைக்குள் நடையை கட்டினர்.இதற்கிடையே, கேப்டன் பாபர் அசாமும் 12 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் வழங்கிய எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற டேரில் மிட்செல் வீணடித்தார். அதன் பிறகு 59 ரன்னில் ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.

வாய்ப்புகளை நழுவ விட்டது தான் நியூசிலாந்துக்கு பாதகமாக மாறியது. அதன் பிறகு பாபர் அசாம் வலுவாக காலூன்றி துரிதமான ரன்வேட்டையில் ஈடுபட்டார். அவருக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது நன்கு ஒத்துழைப்பு கொடுக்க பாகிஸ்தானின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபாரமாக ஆடிய பாபர் அசாம் பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த ஆண்டில் அவரது 4-வது டெஸ்ட் சதம் இதுவாகும். சர்ப்ராஸ் அகமதுவும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் சர்ப்ராஸ் 86 ரன்களில் (153 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். அசாம்- சர்ப்ராஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தப்பட்டன. 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்டில் முதல் இரு விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தப்பட்டது இதுவே முதல் நிகழ்வாகும்.


Next Story