தீப்தி சர்மா போராட்டம் வீண்; உ.பி. அணியை வீழ்த்தி குஜராத் அணி அபாரம்


தீப்தி சர்மா போராட்டம் வீண்; உ.பி. அணியை வீழ்த்தி குஜராத் அணி அபாரம்
x
தினத்தந்தி 11 March 2024 5:50 PM GMT (Updated: 11 March 2024 5:54 PM GMT)

உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. தற்போது லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் அணிக்கு கேப்டன் பெத் மூனி - லாரா வோல்வார்ட் ஆகியோர் இணைந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இந்த ஜோடியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வோல்வார்ட் 43 (30) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா ரன் (0) ஏதும் எடுக்காமலும், போப் லிட்ச்பீல்ட் 4 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களும், பாரதி ஒரு ரன்னும், கேத்ரின் பிரைஸ் ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

முடிவில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 52 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. உ.பி. அணி தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அத்தப்பத்து ரன்கள் (0) ஏதுமின்றியும், கிரண் நவ்கிரேவும் ரன்கள் (0) ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா ஷ்ராவத் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உ.பி. வாரியர்ஸ் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - பூனம் கேம்னார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த தீப்தி சர்மா 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்களும், பூனம் கேம்னார் 36 ரன்களும் எடுத்திருந்தனர். குஜராத் அணியின் சார்பில் சப்னம் ஷகில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.


Next Story