'உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி தயார்' - கபில்தேவ் பேட்டி


உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி தயார் - கபில்தேவ் பேட்டி
x

ஆசிய கோப்பை போட்டியை தொடர்ந்து உலகக் கோப்பையை வெல்வதற்கும் இந்திய அணி தயாராகி விட்டதாக கபில்தேவ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது அணியால் டாப்-4 இடத்திற்குள் வர முடியும் என்றால் அது தான் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு அதிர்ஷ்டமும், சில விஷயங்களும் சாதகமாக அமைந்தால் கோப்பையை வென்று விடலாம். உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. இந்தியா சிறந்த அணியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய இதயம் இந்தியாவுக்கே கோப்பை என்று சொல்கிறது. ஆனால் மனசு, நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறுகிறது. நமது அணி பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆனால் மற்ற அணிகள் எப்படி இருக்கிறது என்பது அவ்வளவாக தெரியாது. அதனால் யாருக்கு வாய்ப்பு என்பதை கணித்து சொல்வது நியாயமானதாக இருக்காது.

இந்தியாவை பொறுத்தவரை உலகக் கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்வதற்கு தயாராகி விட்டது. நமது வீரர்கள் ஆர்வத்துடனும், பதற்றமின்றி உற்சாகத்துடனும் விளையாட வேண்டும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீசிய விதம் அற்புதம். இப்போதெல்லாம் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லா கண்டங்களிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது மேலும் ஒரு சிறப்பான விஷயமாகும். ஒரு காலத்தில் நமது அணி சுழற்பந்து வீச்சையே அதிகம் நம்பி இருந்தது. ஆனால் தற்போது அப்படிப்பட்ட சூழல் இல்லை. அது தான் நமது அணியின் பலமாகும்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வெறும் 50 ரன்னில் சுருட்டி பிரமாதமான ஒரு கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. ஒரு கிரிக்கெட் வீரராக எதிரணியை 30 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். அதே நேரத்தில் ஒரு ரசிகராக போட்டி பரபரப்புடன் மிகவும் நெருக்கமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.

இந்திய அணியில் அக்ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் அவதிப்படுகிறார்கள். எந்த ஒரு அணியாக இருந்தாலும் இரண்டு முன்னணி வீரர்கள் காயத்தில் சிக்கினால் நிச்சயம் அது அணியின் சரியான கலவையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காகத் தான் அதிர்ஷ்டமும் தேவையாகும்.

இளம் வீரரான சுப்மன் கில் அருமையாக விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக அவர் இருப்பார். அவரை போன்ற திறமையான வீரர்கள் இந்தியாவில் இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

உலகக் கோப்பை போட்டிக்கு சிறந்த ஒரு அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். அது அவர்களது பணி. அத்துடன் இதை விட்டுவிட வேண்டும். அணி தேர்வு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.


Next Story