இலங்கை உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு


இலங்கை உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2022 6:10 PM GMT (Updated: 27 Dec 2022 7:18 PM GMT)

டி 20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

2-வது ஆட்டம் புனேயிலும் (ஜன.5-ந்தேதி), 3-வது ஆட்டம் ராஜ்கோட்டிலும் (ஜன.7) நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் கவுகாத்தி (ஜன.10), கொல்கத்தா (ஜன.12) திருவனந்தபுரம் (ஜன.15) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தவானுக்கு இடமில்லை

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக ஆடிய 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தொடக்க வீரர் வரிசைக்கு இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில்லுக்கு முன்னுரிமை அளிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதால், தவானுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அதே சமயம் தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார்.

இலங்கை தொடருக்கான இந்திய 20 ஓவர் அணி:

ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ்குமார்.

இந்திய ஒரு நாள் போட்டி அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங்.


Next Story