''மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என ஹர்திக் எங்களிடம் விருப்பம் தெரிவித்தார்" - குஜராத் அணியின் இயக்குனர்
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தம்முடைய பழைய அணியான மும்பைக்கு ஹர்திக் பாண்ட்யா திரும்ப செல்வதாக தங்களிடம் தெரிவித்த முடிவை மதித்து அனுமதி கொடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "குஜராத் அணியின் முதல் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா 2 சிறப்பான சீசன்களை எங்களுக்கு கொடுத்தார். அதில் முதல் சீசனில் கோப்பையை வென்ற நாங்கள் 2வது சீசனில் 2-வது இடம் பிடித்தோம். தற்போது அவர் தம்முடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு செல்ல விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தார். இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் வருங்காலத்தில் அவர் சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.