நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாண்ட்யா விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு...!


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாண்ட்யா விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு...!
x

Image Credits : BCCI

தினத்தந்தி 20 Oct 2023 8:43 AM GMT (Updated: 20 Oct 2023 8:46 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 9-வது ஓவரை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். அப்போது தவறி கீழே விழுந்த அவருக்கு காலில் பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், தொடர்ந்து அந்த ஓவரில் எஞ்சிய மூன்று பந்துகளை வீச முயன்றார்.

ஆனால், பந்துவீச அவரது கால் ஒத்துழைக்காததால், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து விராட் கோலி, அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளை வீசி முடித்தார்.

இந்நிலையில் வருகிற 22-ந் தேதி தரம்சாலாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஹர்திக் பாண்ட்யாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்.

மேலும் அவர் வருகிற 22-ந் தேதி தரம்சாலாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். சிகிச்சைக்குப் பிறகு வருகிற 29ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பார்" என்று தெரிவித்துள்ளார்.




Next Story