ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி சதம் - இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இந்திய அணி 333 ரன்கள் குவிப்பு


ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி சதம் - இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இந்திய அணி 333 ரன்கள் குவிப்பு
x

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 143 ரன்கள் குவித்து அசத்தல்.

கேன்டர்பரி,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் கேன்டர்பரி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த ஆட்டத்துகான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் மந்தனா அகியோர் களம் இறங்கினர்.

இதில் ஷபாலி 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யாஷ்டிகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக ஆடியது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக உயர்ந்த போது யாஷ்டிகா 26 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து மந்தனாவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில் 40 ரன்கள் எடுத்த நிலையில் மந்தனா ஆட்டம் இழந்தார். அடுத்து ஹார்லீன் களம் இறங்கினார். 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்-ஹார்லீன் ஜோடி 113 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஹார்லின் 58 ரன்னுக்கும், அடுத்து வந்த பூஜா 18 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில் பொறுமையாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்தார். இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி ஆட உள்ளது.


Next Story