ஹர்ஷல் படேல் அதிரடி அரைசதம் : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி


ஹர்ஷல் படேல் அதிரடி அரைசதம் : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
x

Image Tweeted By @NorthantsCCC

தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர்.

லண்டன்,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு ஜூலை 7 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 20 ஓவர் போட்டி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதமாக தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியன்ஸ் என்ற பெயரில் இந்திய வீரர்கள் இங்கிலாந்து உள்நாட்டு அணிகளுக்கு எதிராக 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பயிற்சி போட்டியில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து 2வது பயிற்சி போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணியை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நார்த்தாம்ப்டன்ஷைர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் சாம்சன் (0), இஷான் கிஷன் (16), திரிபாதி (7) , சூர்யகுமார் யாதவ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 34 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஹர்ஷல் படேல் அருமையாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹர்ஷல் படேல் 36 பந்தில் 54 ரன்களை குவிக்க, 20 ஓவரில் இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் அடித்தது.

150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நார்த்தாம்ப்டன்ஷைர் அணி 139 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.


Next Story