'விராட், ரோகித், பும்ரா, குல்தீப்பை விட இவர்தான் உலகக்கோப்பையில் இந்தியாவின் கேம் சேஞ்சர்'- வாசிம் அக்ரம் கணிப்பு
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
லாகூர்,
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் ஆட்டத்தை மாற்றும் இந்திய வீரராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கணித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
"அடுத்து நடைபெறும் உலகக்கோப்பையில் விராட், ரோகித், பும்ரா, குல்தீப்பை விட ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் ஆட்டத்தை மாற்றுபவராக இருப்பார். பேட்டிங், பவுலிங் துறைகளில் அசத்தும் இந்தியாவின் முக்கிய வீரராக இருப்பார். அவரை போன்ற வீரர்களால் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையானதாக இந்தியா இருக்கும். மேலும் இளம் வீரர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.
அதே போல இந்திய அணியின் பவுலர்கள் என்ன செய்வார்கள் என்பதை இத்தொடரில் நாம் பார்த்தோம். குறிப்பாக ஆசிய கோப்பையில் பெரிய அணிகளுக்கு எதிராக குல்தீப் நிறைய விக்கெட்டுகளை எடுத்தார். எனவே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனால் இந்திய அணியை ஆதரிப்பவர்களுக்கு உலகக்கோப்பைக்கு முன்பாக நல்ல அணி கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.