ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்


ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்
x

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.

கிரிக்கெட் வீரர்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக், சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்தார். கடந்த மே மாதத்தில், புலவாயோவில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்குக்கு சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் வாரந்திரம் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்தார். என்றாலும் நோயின் வீரியம் குறையவில்லை. கடைசி காலத்தை சொந்த ஊரில் அவரது விருப்பத்தின்படி குடும்பத்தினருடன் கழித்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசமான நிலையில் நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரது மனைவி நேடின், 4 பிள்ளைகள் உடன் இருந்தனர்.

நேடின் தனது சமூக வலைதள பக்கத்தில், 'செப்.3-ந்தேதி அதிகாலை என் வாழ்க்கையின் மிகவும் அன்பானவரும், எனது அழகான குழந்தைகளின் தந்தையுமான ஸ்ட்ரீக் அவரது விருப்பப்படி கடைசி நாட்களில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய அன்புக்குரியவர் உடன் இருக்க வீட்டில் இருந்து தேவதூதர்களால் அழைத்து செல்லப்பட்டார்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயின் தலைச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய ஹீத் ஸ்ட்ரீக், 1993-ம் ஆண்டு தனது 19-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சாதனை பவுலர்

ஜிம்பாப்வே அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய அவர் 65 டெஸ்டில் 216 விக்கெட்டுகளுடன், ஒரு சதம் உள்பட 1,990 ரன்களும், 189 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 239 விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பதுடன் 13 அரைசதம் உள்பட 2,943 ரன்களும் எடுத்துள்ளார். 68 ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை வழிநடத்தி அதில் 18-ல் வெற்றி தேடித்தந்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட்டுக்கு மேலாகவும், டெஸ்டில் 100 விக்கெட்டுக்கு அதிகமாகவும் வீழ்த்திய ஒரே ஜிம்பாப்வே பவுலர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

ஜிம்பாப்வே அணிக்காக 1996, 1999, 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அதிசயத்தக்க வெற்றிகளை பெற்றது. இவ்விரு ஆட்டங்களிலும் ஹீத் ஸ்ட்ரீக் தலா 3 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஓய்வுக்கு பிறகு ஜிம்பாப்வேயின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார்..2021-ம் ஆண்டில் ஊழல், சூதாட்ட புகாரில் சிக்கிய ஹீத் ஸ்ட்ரீக்குக்கு ஐ.சி.சி. 8 ஆண்டு தடை விதித்தது நினைவிருக்கலாம்.

அவரது மறைவுக்கு ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஹர்பஜன்சிங், ரெய்னா, ஜெயசூர்யா, சங்கக்கரா, ஹென்றி ஒலங்கா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story