உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த அணி விளையாடும் - மெக்கல்லம்
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த அணி விளையாடும் என தான் எதிர்பார்ப்பதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்கல்லம் கூறியுள்ளார்.
வெல்லிங்டன்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா இருக்கும் என நான் நினைப்பதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியா வலுவான அணி என்று நினைக்கிறேன். குறிப்பாக பும்ரா மீண்டும் திரும்பியுள்ளது உங்களுடைய அணியின் பலத்தை அதிகரிக்கும். ஏனெனில் முக்கியமான சமயங்களில் எப்படி தம்முடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வென்று கொடுக்க முடியும் என்பது அவருக்கு தெரியும். எனவே அவர் வந்துள்ளதால் இந்திய அணி வலுவாக இருக்கிறது.
மேலும் இந்திய அணியில் நிறைய திறமையும் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக வெற்றிகரமாக செயல்படுகின்றனர். எனவே இந்தியா இத்தொடரின் இறுதியில் ஒரு அணியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் விளையாடும் அணிகளை கணிப்பது மிகவும் கடினமாகும். சில நேரங்களில் உலகக் கோப்பையின் வெற்றியாளர் அணிகளை பற்றி நீங்கள் கணிப்பது நியாயமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்தியா அங்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்துக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதே போல ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளும் உலக கோப்பையில் வெல்வதற்கான வழிகளை கண்டறியும் திறமையை கொண்டுள்ளன.
அதே சமயம் இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வங்கதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே இந்த உலக கோப்பை அனைவருக்கும் திறந்த ஒன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் யார் நல்ல துவக்கத்தை பெறுகிறார்களோ அவர்களுக்கு இறுதியில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கருதுகிறேன்.
ஸ்டோக்ஸ் கடைசி டி20 உலக கோப்பையிலும், ஒருநாள் உலக கோப்பையிலும் எந்தளவுக்கு இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவரைப் போன்றவருக்காக ஹாரி புரூக்கை நீங்கள் கழற்றி விடுவதில் தவறில்லை.
எனவே வலுவான இங்கிலாந்து போலவே மற்ற அணிகளும் இந்த உலகக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இது போன்ற சூழ்நிலையில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.